தஞ்சை மாவட்டத்தின் மிக முக்கியமான ஊராட்சி, பிள்ளையார்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட RTO அலுவலகம், உலக புகழ்ப்பெற்ற தமிழ் பல்கலைக்கழகமும் வருகிறது. இந்த ஊராட்சியின் தலைவர் உதயகுமார் ஒரு சர்வாதிகாரிப்போல் செயல்படுகிறாராம். கடந்த நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பிள்ளையார்பட்டி பகுதி, சிந்தாமணி பகுதிகளில் புங்கை மரம், சந்தன மரம், தேக்கு மரம் போன்றவற்றை வெட்டி விற்று காசாக்கிவிட்டாராம். காலங்காலமாக இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக இங்கு இருந்த மரங்களை வேரோடு வெட்டியதால், அதில் வசித்துவந்த பறவை இனங்களும், சிறுசிறு விலங்கினங்களும் வசிக்க இடமில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். சிந்தாமணி பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் இது பற்றி முறையிட்ட போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் பதிலளிக்கிறாராம். கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின் போது, இவருக்கு பிடிக்காதவர்களின் வீட்டின் முன்பு இருந்த மரங்களை வெட்டியதாகவும் அப்பகுதி மக்கள் கிசுகிசுக்கிறார்கள். மேலும் இந்த பஞ்சாயத்தில் கொரோனா காலங்களில், வரவு செலவு கணக்கில் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கிசுகிசுக்கிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும், முதலமைச்சர் தனி பிரிவின் கவனத்திற்கும் கண்டிப்பாக கொண்டு செல்வோம் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள் பலர் இதை புகாராக தயார் செய்து நடவடிக்கை எடுக்க தயாராகிவருவதாக தகவல். இந்த புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், வருவாய் கோட்ட அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.