சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக். அயனாவரும் பகுதியில் வசித்து வரும் இவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். விவேக் எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஹாத்வே நிறுவனத்தில் பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்தில் பணியில் இருந்த விவேக்கை, கத்தியுடன் நுழைந்த மர்ம ஆசாமி குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற மேலும் இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது . மாடி வழியாக தப்பிச்சென்ற அவரை சக ஊழியர்கள் பிடிக்க இயலாமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நடந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த போலீசார் காயம் பட்டவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . சம்பவ இடத்தில் உயிரிழந்த விவேக்கின் சடலத்தை பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் உத்தரவின் பேரில் அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் மாடிப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விவேக்கின் மனைவி, சகோதரிகள் மற்றும் குடும்பத்தார் கூடி கதறி அழுது கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கூறி கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுஒரு கட்டிடத்தின் மாடியில் பதுங்கி இருந்த கொலையாளியை அவரது உறவினர் ஒருவரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சுற்றிவளைத்தனர். அவரிடம் இருந்து கொலைக்காக பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றினர்.விசாரணையில் பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைக்ரேசர் சந்தோஷ் என்பதும், ஒப்பந்த அடிப்படையில் , கடந்த நான்கு மாதங்களாக விவேக்கிற்கு கீழ் நிலை ஊழியராக இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பைக் ரேஸ் மீதுள்ள ஆதீத பிரியம் காரணமாக சந்தோஷ் சீக்கிரமாக வெளியே செல்ல வேண்டும் என விவேக்கிடம் அனுமதி கேட்டுள்ளார். பணி முடிக்காமல் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்த விவேக், சந்தோஷின் தாயையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஊழியர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.தாயை திட்டியதை தாங்கிக் கொள்ளாமல் கடுமையான கோபத்தில் இருந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு வந்த போது விவேக்கிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விவேக்கின் கழுத்தில் குத்தி உள்ளார். தப்பி ஓட முயன்ற விவேக்கை விடாமல் துரத்திச்சென்று அலுவலகத்திற்குள்ளேயே வைத்து குத்தி கொலை செய்ததாகவும், தடுக்க வந்த சக ஊழியர்கள் இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாகவும் சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளான். அதே நேரத்தில் கொலையாளி சந்தோஷ் கஞ்சா போதையில் இருந்ததால் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.