குப்பையையும் கொட்டி தாக்குவதும் சரியல்ல..! பாதிரியாரை அடித்த அரசியல் பிரமுகர்

கடலூர் முதுநகரில் 38 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தூய கிறிஸ்தவ நாதர் தேவாலயம் மற்றும் பள்ளி அமைந்துள்ளது .இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உணவு பரிமாறப்பட்ட பின்னர், அதற்கு பயன்படுத்தப்பட்ட கழிவு இலைகள், தட்டுகள் உள்ளிட்ட குப்பைகளை, 38 வது வார்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கொட்டாமல் எப்போதும் போல 42 வது வார்டில் உள்ள குப்பைக்கொட்டும் இடத்தில் ஆலய ஊழியர்கள் கொட்டியுள்ளனர்.

42ஆவது வார்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து திமுக ஆதரவாளராக சென்ற ஒற்றக்கை செந்தில் என்பவரின் மனைவி விஜயலெட்சுமி கவுன்சிலராக உள்ளார்.மறுநாள் காலை தேவாலயத்தில் இருந்து தங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை அறிந்த 42ஆவது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில், தேவாலய ஊழியர்கள் கொட்டிய குப்பைகளை மீண்டும் தேவாலயத்திற்கு எதிரே சென்று கொட்டுமாறு, தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி மாநகராட்சி ஊழியர்களும் அந்த குப்பைகளை அள்ளிச்சென்று தேவாலயத்தின் எதிரே கொட்டியுள்ளனர்.

இதனை பார்த்த தேவாலய பாதிரியார் ஃபிலிப் ரிச்சர்ட் என்பவர், இது தொடர்பாக கவுன்சிலரின் கணவர் செந்திலிடம் செல்போனில் பேசியபோது இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து கவுன்சிலர் விஜயலட்சுமி, கணவர் செந்தில் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தேவாலயத்திற்கு புறப்பட்டு வந்தனர். வாசலுக்கு வந்த பாதிரியாரை , செந்தில் ஆவேசமாக அடித்து உள்ளே விரட்டினார்.தேவலய வளாகத்திற்குள் வைத்தும் பாதிரியாரை இரு முறை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்கள் முன்னால் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் , பாதிரியார் ரிச்சர்ட் அளித்த புகாரின் பேரில் கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்திலை கடலூர் துறைமுகம் போலீசார் கைது செய்தனர்.ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செந்திலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகம் படித்தவை

^