சர்ச்சைக்குரிய பேச்சு: சீமான் மீது விரைவில் நடவடிக்கை” - தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் தகவல்

பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் அருண் ஹல்டர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நான் தமிழகத்திற்கு பல்வேறு வழக்கு விசாரணைக்காக வந்தேன். அடிக்கடி தமிழகத்திற்கு வருவதுண்டு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சில விஷயங்கள் நன்றாக நடக்கிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும். கடந்த முறை சென்னை வந்திருந்த பொழுது ஆட்டோ ரிக்ஷாகாரர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கெங்கு பிரச்சனை இருக்கிறதோ அங்கெல்லாம் ஆணையம் முன்னிற்கும்.இன்று ஒட்டுமொத்தமாக 16 வழக்குகளின் மீது விசாரணை நடைபெற்றது. இதில் பத்து வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மீதமுள்ள ஆறு வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை தமிழகத்திற்கு வந்த போது எஸ்.சி.,எஸ்டி காலி பணியிடங்கள் 10,402 நிரப்பப்படாமல் இருக்கிறது என அரசு வழங்கிய அறிக்கையில் இருந்தது. அந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசிடம் தெரிவித்தும் இன்னும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் ஒருவர் விவரங்களை கேட்டறிந்தார். ஆனால் மருத்துவத்துறை மூலம் அது வழங்கப்படவில்லை. அது குறித்து அதிகாரிகள் இன்று வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்கு பிறகு விவரங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அம்பாசமுத்திரம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை. பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் எந்தவித புகாரையும் எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை.எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு எங்களால் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் ஒரு எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாது.ஈரோடு சட்டப்பேரவை தேர்தலின் பொழுது அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கக்கூடிய நிலையில் இந்த விவகாரத்தில் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

அதிகம் படித்தவை

^