நாமக்கல் அடுத்த மோகனூர் ராசிபாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார், கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சிவக்குமாரின் மனைவி பார்கவிதான் அனைத்துக்கும் காரணம், அவரை விசாரியுங்கள் எனக் கூறி விட்டு போனை துண்டித்திருக்கிறார். அதன்படி பார்கவியை விசாரித்ததில், அவரும் அவரது தாயாரும் பார்கவியின் ஆண் நண்பனுமான செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து கூலிப்படையை ஏவி சிவக்குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது.
ராணுவத்தில் பணியாற்றிய சிவக்குமார், கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் ஓய்வுபெற்று ஊர் திரும்பியிருக்கிறார். தனது உழைப்பில் அழகான வீடு, விவசாய நிலம் என கணிசமான அளவு சொத்துகளை சம்பாதித்தவரால் நேர்மையான வாழ்க்கைத் துணையை சம்பாதிக்க முடியாமல் போய்விட்டதாகக் கூறுகின்றனர் அக்கம்பக்கத்தினர். சிவக்குமார் ராணுவத்தில் பணியாற்றிய நேரத்தில் ஊரிலுள்ள அவரது வீட்டுக்கு செல்வராஜ் என்பவன் தனது மனைவியுடன் வாடகைக்கு குடிவந்திருக்கிறான். வீட்டில் தனியாக இருந்த பார்கவியுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டவன், புதிதாக லாரி வாங்குவதற்காக அவரிடம் பணம் கேட்டிருக்கிறான். பார்கவியும் கணவனிடம் போனில் பேசி 4 லட்ச ரூபாயை செல்வராஜுவுக்கு கொடுத்திருக்கிறார்.ஓய்வு பெற்று ஊர் வந்து சேர்ந்த சிவக்குமாருக்கு செல்வராஜ் - பார்கவி இடையிலான தவறான உறவு கொஞ்சம் தாமதமாகத்தான் தெரியவந்திருக்கிறது. இருவரையும் தனித்தனியே அழைத்து கண்டித்த அவர், செல்வராஜின் மனைவி கர்ப்பமாக இருந்ததால் பரிதாபப்பட்டு வீட்டை காலி செய்ய வற்புறுத்தாமல் விட்டிருக்கிறார். இதை சாதகமாக்கிக் கொண்ட செல்வராஜ் - பார்கவி ஜோடி மீண்டும் தங்களது தவறான உறவைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சிவக்குமாருக்கும் பார்கவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கணவனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்த பார்கவி, அதனை செல்வராஜிடமும் தனது தாய் அம்சவள்ளியிடமும் கூறியிருக்கிறார். மருமகனின் சொத்துகளும் மகளின் சந்தோஷமும் மட்டுமே போதும் என நினைத்த அம்சவள்ளியும் செல்வராஜுவின் திட்டத்துக்கு துணை போயிருக்கிறார் என்கின்றனர் போலீசார்.லாரி வாங்குவதற்காக சிவக்குமாரிடம் இருந்து கடனாக வாங்கிய 4 லட்ச ரூபாயில் ஒரு பகுதியை கூலிப்படைக்குக் கொடுத்து, அவரைத் தீர்த்துக் கட்ட சொல்லி இருக்கிறான் செல்வராஜ். அதன்படி அதன்படி கடந்த மாதம் காரில் சிவக்குமார் தனியாக சென்ற போது லாரி மூலம் விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததில் அவர் தப்பித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தனது தங்கை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்த சிவக்குமாரை சுற்றி வளைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்திருக்கிறது கூலிப்படை. இதனையடுத்து பார்கவி, செல்வராஜ், அம்சவள்ளியோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கூலிப்படையையும் போலீசார் கைது செய்தனர்.