மாத ராசி பலன்

மிதுனம்

மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)


ராகுப் பெயர்ச்சியால் யோகம் சேரும்!

சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற மிதுன ராசி நேயர்களே!

அனைத்துக் காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் விதத்தில் சனி, குரு வக்ரத்தோடு ஆண்டு தொடங்குகிறது.
ஆனால், ஆண்டின் தொடக்க நாள் சந்திராஷ்டமமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. அஷ்டமத்துச் சந்திரனைக் குரு பார்க்கிறார் அல்லவா? எனவே, எதிர்பார்ப்புகள் தாமதமானாலும் கூட கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும்.

அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர்கள்!
ஆன்மிக நாட்டம் அதிகமிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நகைச்சுவை உணர்வு உங்களிடம் அதிகம் இருப்பதால் நண்பர்களுக்கு மத்தியில் ஏற்படும் பகைச்சுவை உணர்வுகளைப் போக்கிக் கொள்வீர்கள். நீங்கள் எடுத்த முடிவையே முத்தாய்ப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாக குரு அமைகிறார். அவர் உங்கள் ராசிநாதன் புதனுக்கு அனுகூலமானவர் இல்லை. மேலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர். எனவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக கவனம் செலுத்தினால் தான் வருங்காலத்தை நலமாக அமைத்துக் கொள்ள இயலும்.

வக்ர இயக்கத்தால் வளர்ச்சி கூடும் நேரம்!

ஆண்டின் தொடக்கத்தில் 2-ல் குரு வக்ரம், 6-ல் சனி வக்ரம், 12-ல் சொந்த வீட்டில் சுக்ரன். இப்படி இருக்கும் யோகம் யாருக்கும் அமையாது. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது யோகத்தைக் கொடுக்கும்.

எனவே, 2-ல் இருக்கும் குரு திரண்ட செல்வத்தை வழங்கும். தெய்வீகச் சிந்தனையை மேலோங்க வைக்கும். புதிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொடுக்கும். மேல் மக்கள் தொடர்பு கிட்டும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். கல்யாணக் கனவுகளை நனவாக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வீடு கட்டும் அல்லது வாங்கும் வாய்ப்பு வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தும் அது நடக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு ஆண்டின் தொடக்கம் அதைப் பூர்த்தி செய்துகொடுக்கப் போகிறது.

உங்கள் ராசிக்கு 8, 9-க்கு அதிபதியானவர் சனி. அந்த சனி பகவான் அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் அவர் வக்ரம் பெறும்பொழுதெல்லாம் வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது பழமொழியல்லவா? எனவே, தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மாறும். தடைக் கற்கள் ஒவ்வொன்றாக விலகும். கடைதிறப்பு விழாக்களையும், கட்டிடத் திறப்பு விழாக்களையும் நடத்திப் பார்ப்பீர்கள். ஆரோக்கியத் தொல்லைகள் அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருந்த தொய்வுகள் அகலும்.

உடன்பணிபுரிபவர்கள் உங்களுக்கு இடையூறாக இருக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம். இடமாற்றம், இலாகா மாற்றங்
கள் ஒரு சிலருக்கு எதிர்பாராத விதத்தில் வந்து நன்மைகளைக் கொடுக்கும்.

சுக்ர பலம் நன்றாக இருப்பதால் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பெண் வழி பிரச்சினைகள் நல்லமுடிவிற்கு வரும். அனைத்துக் கடனும் தீர்ந்து ஆனந்தம் உருவாகப் போகிறது.

குரு பார்வையால் வரும் யோகம்!

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் 5.7.2015-ல் சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். எல்லா கிரகங்களுக்கும் உள்ள பார்வையைக் காட்டிலும் இந்த குருவின் பார்வைக்கு மட்டும் சிறப்புப் பலன்கள் உண்டு.

உங்களைப் பொறுத்தவரை தற்சமயம் ஆனி 20-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் வரப்போகிறார். அந்த ஸ்தானம் சகோதர ஸ்தானம் மட்டுமல்ல, முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல முடிவெடுக்க வைக்கும் வெற்றி ஸ்தானமும் ஆகும். அந்த வெற்றிக்குரிய வாய்ப்புகளை அதன் பார்வை தான் கொடுக்க வேண்டும்.

முன்னேற்றம் தருமா, மூன்றாமிடத்து குரு!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் மூன்றாமிடமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். அங்கிருந்து கொண்டு அதன் அருட்பார்வையை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களிலும் செலுத்துகிறார். இதன் விளைவாக அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கப் போகின்றது.

ஏழினைக் குருதான் பார்த்தால்
இல்லறம் சிறப்பாய் வாய்க்கும்!
ஒன்பதைக் குருதான் பார்த்தால்
பொன் பொருள் வந்து சேரும்!
பதினொன்றை குருதான் பார்த்தால்
பணத்தேவை பூர்த்தியாகும்!


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

எனவே, சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் கல்யாணக் கனவுகள் நனவாகும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.

ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குருவால் பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். புண்ணிய யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பெண் குழந்தைகளின் சீர்வரிசைச் சாமான்களை சேர்க்க முடிவு செய்வீர்கள்.

பதினோராமிடத்தைக் குரு பார்ப்பதால் பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். விமானப் பயணங்களும் விரும்பிய விதத்தில் ஒரு சிலருக்கு அமையலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். புதிய தொழிலில் உங்கள் கவனத்தைச் செலுத்துவீர்கள்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அந்த நேரத்தில் கும்பத்தில் கேது சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாகச் சந்தித்தவர் இப்பொழுது விலகுவதால் முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். சின்னச்சின்ன ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

போராடிய சகோதர வர்க்கத்தினர் உங்கள் சொல்கேட்டு நடக்க முன்வருவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத வாழ்க்கையினை அமைத்துக் கொள்வீர்கள். 9-ம் இடத்து கேதுவின் ஆதிக்கத்தால் இதுவரை பாசம் காட்டாத பெற்றோர் பாசம் காட்டுவர். விரோதங்கள் விலகும். வேற்று மதத்தாரோடு செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சனியின் சஞ்சார நிலை!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார். 30.7. 2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார்.

பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார். இப்படி இந்த ஆண்டு முழுவதும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதும், வக்ர நிவர்த்தியாவதும் மாறி, மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

துலாத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களாலும், பத்திரப்பதிவிலும் பிரச்சினைகள் உருவாகி மறையும். பிள்ளைகளும் தன்னிச்சையாகச் செயல்படலாம். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ள பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. அன்பு செலுத்துவதன் மூலமும், அதிக விழிப்புணர்ச்சியை மேற்கொள்வதன் மூலமும் இக்காலத்தை பொற்காலமாக மாற்றிக் கொள்ளலாம்.

விருச்சிகத்தில் சனி வக்ரம் பெறும்பொழுதெல்லாம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும், வேலை வாய்ப்பில் முன்னேற்றமும் உண்டு. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபடுவது நல்லது.

குருவின் வக்ர காலம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறும் பொழுதும் 7.2. 2016-ல் சிம்ம ராசிக்குள் வக்ரம் பெறும் பொழுதும் நல்ல பலன்களே உங்களுக்கு வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும். உறவினர் பகை அகலும். அதிகச் செலவு செய்து முடிக்க வேண்டிய காரியம் குறைந்த செலவிலேயே முடிவடையும். வியாழனின் விரதமும், தென்முகக் கடவுளின் வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

ராசிநாதன் புதனைப் பலப்படுத்த இலக்குமி சமேத விஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். புதன்கிழமை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். மேலும் வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் வெற்றி செய்தியை வரவழைத்துக் கொள்ள இயலும். மேலும் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை செய்தால் தினசரி வாழ்க்கையில் பண மழை கொட்டும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

மிதுன ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் குடும்பச் சுமை கூடுதலாக இருக்கும். கூட இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மன அமைதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. குருப்பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு நற்பலன்களும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு யோக வாய்ப்புகள் அதிகரிப்பும் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியும் தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றாக ஆவணிக்கு மேல் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றமும், உயர்பதவியும் வந்து சேரலாம். விஷ்ணு வழிபாடு வேதனை தீர்க்கும். சர்ப்ப பிரீதி செய்வது சந்தோஷம் வழங்கும்.

அதிகம் படித்தவை

^