மாத ராசி பலன்
ரிஷபம்
மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
முத்தான பலன்தரும் பத்தாமிடத்து கேது!
நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்த ரிஷப ராசி நேயர்களே!
உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் விதத்தில் குரு சந்திர யோகத்தோடு புத்தாண்டு பிறக்கிறது.
வருடம் பிறக்கின்றபொழுதே வசந்தம் வரும் விதத்தில் சுக்ர பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றார். எனவே, அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட அதிக லாபம் கிடைக்கும்.
சனி பகவான் கடந்த சில மாதங்களாக விருச்சிகத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்க்கின்றார். இவ்வாறு சனியின் பார்வை பதிவது அவ்வளவு நல்லதல்ல. 'ஆயுள்காரகன்' என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் விருச்சிகத்தில் பகை கிரகமான செவ்வாய் வீட்டிலிருந்து பார்க்கும் பொழுது, ஆரோக்கியத்திற்கு என்று அதிக செலவிடும் சூழ்நிலை உருவாகும். அற்புதமான வாய்ப்புகள் வந்தாலும் அது கைநழுவிச் செல்லும் சூழ்நிலை அமையும். இருந்தாலும் இப்பொழுது சனி பகவான் வக்ரம் பெற்றிருப்பது உங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கப் போகின்றது.
நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வீர்கள்!
'உழைப்பு' என்ற நான்கெழுத்தை உறுதுணையாகக் கொண்டு உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் நீங்கள். களைப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நன்றி மறக்காத நல்ல குணம் உங்களிடம் இருப்பதால் தான் நண்பர்கள் உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டின் தொடக்கம் முதல் ஆனி 20-ம் தேதி வரை ஒன்பதாம் இடத்தில் ஒளி கொடுக்கும் சந்திரன் வீற்றிருக்க மன்மத வருடம் மகத்தாகப் பிறக்கிறது.
சப்தமச் சனியின் ஆதிக்கம் வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லைகள் குறையும். வேலைப் பளு கூடுகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனி உத்தியோகத்தில் உடனிருப்பவர் களின் ஒத்துழைப்போடு நிம்மதி காண்பீர்கள். அதே நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்ரனுக்கு பகை கிரகமாக விளங்கும் குரு பகவானும் வக்ரம் பெற்றிருப்பதால் செய்யும் முயற்சிகளில் எல்லாம் ஜெயம் கிடைக்கும்.
குருவின் பார்வை 7, 9 ஆகிய இடங்களில் பதிவது தான் யோகம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், பிரச்சினைகள் தீரவும் வழிவகுக்கும்.
உத்தியோகத்தின் காரணமாக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலும் வசித்து வருபவர்கள் கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைத்து, தீட்டும் திட்டங்களில் வெற்றி காணப்போகிறார்கள்.
நல்லது செய்யுமா நான்காமிடத்து குரு?
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்த்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்க்கப் போகிறார். எனவே வீடு வாங்கலாம், விவாகமும் செய்யலாம், நாடுவிட்டு நாடு சென்று நன்மையடையலாம், ஆனால் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை மட்டும் சேமிக்க இயலாது.
நான்காமிடத்தில் சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவானின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றது.
எட்டினை குருதான் பார்த்தால்
இழப்புகள் ஈடு செய்யும்!
பத்தினை குருதான் பார்த்தால்
பணம்தினம் தொழிலில் சேரும்!
பன்னிரெண்டை குருதான் பார்த்தால்
பயணத்தால் நன்மை வாய்க்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
எனவே அருள் தரும் குருவின் பார்வை பதியும் இடங்கள் எல்லாம் அடுக்கடுக்காக நல்ல பலன்கள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை பயணத்தில் வளர்ச்சி கூடும். வருமானப் பற்றாக்குறை விலகும்.
எட்டாமிடத்தை குரு பார்ப்பதால் எதிர்பார்த்த மாற்றங்கள் இல்லம் தேடி வரும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வருவதற்கான வழிபிறக்கும்.
பத்தாமிடத்தை குரு பார்த்தால் முத்தான தொழில்கள் வாய்க்கும். மூடிக் கிடந்த தொழிலில் இனி வெற்றி நடைபோடும் நிலை உருவாகும். உத்தியோக முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு அத்தனை நிறுவனங்களில் இருந்தும் அழைப்பு வரும். 12-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். போராட்ட வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும். வாகன வசதிகளைக் காணப்போகிறீர்கள்.
நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!
மார்கழி 23-ம் தேதி (8.1.2016 அன்று) சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகின்றார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகின்றார். உங்கள் ராசி அடிப்படையில் நான்காமிடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சுகபோகச் செலவுகள் அதிகரிக்கும்.
தகராறுகள் அகலவும், தக்க பலன்கள் உறவினர்களால் கிடைக்கவும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி ஆதரவு குறையலாம். வீடு, இடம் கட்டுவதில் அல்லது வாங்குவதில் விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவைப் பொறுத்தவரை முத்தான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும். முதலீடு செய்ய நண்பர்கள் காத்திருப்பர்.
எந்ததொழிலை செய்தாலும் ஏற்றம் கிடைக்கும். இருக்கும் இடத்திலேயே நீடிக்கலாமா? அல்லது மாறிக்கொள்ளலாமா? என்று நினைத்தவர்களுக்கு உங்கள் முக்கியத்துவம் அறிந்து முதலாளிகள் சில சலுகைகள் செய்யலாம். எனவே, உத்தியோக தொழிலைப் பொறுத்தவரை உயர்வுக்கு அடித்தளமிடும் நேரமாக இந்த நேரத்தைக் கருதலாம்.
சனியின் சஞ்சார நிலை!
சனிபகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். வைகாசி 29-ம் தேதி (12.6.2015) துலாம் ராசிக்கு வக்ரமாகச் செல்கிறார். அங்கிருந்து 30.7. 2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு வருடக்கடைசியில் பங்குனி 13-ம் தேதி (26.3.2016) விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார். ஆவணி 19-ம் தேதி (5.9.2015) விருச்சிக ராசிக்குள் சனி வக்ர நிவர்த்தியாகிறார். இப்படி வருடம் முழுவதும் சனி வக்ரமாவதும், வக்ர நிவர்த்தியாவதும் மாறிமாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வக்ர காலத்தில் உங்களுக்கு சப்தமச் சனியின் ஆதிக்கம் நன்மையைச் செய்யும். என்றாலும், தொழில் உத்தியோகத்தில் வேலைப் பளுவை அதிகரிக்க வைப்பர். உடன் இருப்பவர் களின் ஒத்துழைப்பு குறையும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. 6-ல் சனி சஞ்சரிக்கும் பொழுது அற்புதப் பலன்கள் நிறைய நடக்கும். கொஞ்ச நாட்கள் சஞ்சரித்தாலும் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். இக்காலத்தில் சஞ்சலம் தீர்க்கும் சனி பகவானின் கவசம் பாடி சனியை வழிபடுவதோடு அனுமனை வழிபட்டால் அல்லல்கள் தீரும். ஆனந்தம் சேரும்.
குருவின் வக்ர காலம்!
20.12.2015-ல் கன்னி ராசியில் குரு அதிசாரம் பெறுகிறார். இந்த அதிசார காலத்தில் உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். பகைவனின் பார்வை பதிவதால் தொகை வருவதில் தடை ஏற்படலாம். துணையாக இருப்பவர்களை நம்பிச் செயல்படும் பொழுது கொஞ்சம் யோசிப்பது நல்லது. மனை கட்டியது பாதியில் நிற்கிறதே என்று கவலைப்படுவீர்கள். துணையாக இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் தான் பண மழையில் நனையும் வாய்ப்பு கிட்டும். பார்க்கும் தொழிலில் எதிர்பார்த்த லாபமும் வந்து சேரும்.
அதே நேரத்தில் சிம்ம ராசிக்குள் குரு பகவான் 7.2.2016-ல் வக்ரம் பெறுகிறார். இது ஒரு வழிக்கு நன்மைதான். அர்த்தாஷ்டம குரு வக்ரம் பெற்றால் அடுக்கடுக்காக நல்ல பலன்கள் வந்து சேருமல்லவா? குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயமும், சொந்த பந்தங்களால் நன்மையும் உருவாகும். போட்டிக் கடை விரித்தோர் விலகுவர். பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டைக் கூட ஒரு சிலர் விலைக்கு வாங்குவர்.
மாற்றங்கள் வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மறுப்புச் சொல்லியவர்கள் விருப்பத்தோடு வந்திணைவர். கூட்டாளிகள் விலகினாலும் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற திறமை மிக்கவர்கள் வந்திணைவர். பாட்டாளி வர்க்கம் முதல் பணக்கார வர்க்கம் வரை உங்களுக்கு பழக்கங்கள் ஏற்படும். இக்காலத்தில் குருவை வழிபடுவதன் மூலம் மேலும் குதூகலத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.
வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!
ராசிநாதன் சுக்ரனை பலப்படுத்த வெள்ளிக்கிழமை தோறும் இலக்குமி கவசம் பாடி இலக்குமியை வழிபட்டு வாருங்கள். திருமகள் அருளால் திரவியம் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஜாதகம் சாதகமாக அமைய தங்களின் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து செய்வது நல்லது.
மங்கையருக்கான மகத்தான பலன்கள்!
ரிஷப ராசியில் பிறந்த பெண்களே, நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் கணவன் - மனைவியரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குழந்தைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள். வாங்கிய சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். ராகு-கேது மாற்றத்தால் தாய் வழியில் உள்ள அன்பு குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்கள் முன்னேற்றப் பாதையில் சில மாற்றங்கள் உருவாகும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் மாறுதல்கள் கிடைத்து மகிழ்வர். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் இனி வருடத்தின் பிற்பகுதியில் செல்வ வளம் பெருகி தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.