மாத ராசி பலன்
மேஷம்
மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
ஆனி இருபதுக்கு மேல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும்!
மற்றவர்கள் மனம் அறிந்தும், குணமறிந்தும் பேசுவதில் வல்லவர்களாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!
அதிகமாக மனஉறுதி படைத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் நீங்கள். காரணம் உங்கள் ராசிநாதன் செவ்வாயாக இருப்பது தான். செவ்வாயைத் 'தைரியகாரகன்' என்று வர்ணிப்பது வழக்கம்.
பாசம் வைப்பது போல வேஷம் போட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் பலர் வாழும் உலகத்தில், உண்மையிலேயே பாசம் வைத்துப் பக்குவமாக நடந்து கொள்பவர்கள் நீங்கள் தான். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் பொழுது மட்டும் நீங்கள் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
சுக்ரன் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கும், 7-ம் இடத்திற்கும் அதிபதியாவதால் வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே உங்களுக்கு வருங்காலம் அமைகின்றது. தனாதிபதியாக சுக்ரன் விளங்குகிறார். தொழில் ஸ்தானாதிபதியாக சனி விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் சாதனையாளராக திகழ்வீர்கள். இல்லையேல் சோதனைகளுக்கு ஆட்பட்டு சொல்லைச் செயலாக்கிக் காட்ட இயலாமல் தவிப்பீர்கள், தத்தளிப்பீர்கள்.
நல்ல தகவல் நாடி வந்து சேரும் நேரம்!
ஆண்டின் தொடக்கம் முதல் ஆனி 19-ம் தேதி வரை உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிற பொழுது நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரப்போகின்றது.
அதிலும் குறிப்பாக இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சந்திரன் உலா வந்து பிறப்பதால் தொழில் வளம் பெருகும். தொல்லைகள் அகலும். எழிலான வாழ்க்கைக்கு இந்த ஆண்டு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும். அஷ்டமத்துச் சனியின் வக்ர இயக்கம் அற்புதமான பலன்களை அள்ளித் தரும். ஆதரவு கொடுக்க மறுத்தவர்கள் கூட வலிய வந்து உதவிக்கரம் நீட்டுவர்.
அதே நேரத்தில் அந்தச் சனியைப் பார்க்கும் குருவோ உச்சம் பெற்றிருக்கிறார். அந்தக் குருவும் வக்ர இயக்கத்தில் தானே இருக்கிறார் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வருடம் பிறந்த இரண்டாம் நாளே வக்ர நிவர்த்தியாகி விடுகிறார். எனவே, உச்சம் பெற்ற குரு மிகுந்த பலம் பெற்று, சென்ற ஆண்டில் நடை பெறாத சில காரியங்களைச் சீக்கிரமாக முடித்துக் கொடுக்கும் விதத்தில் சாதகமான பார்வையை வழங்கப் போகின்றது.
எனவே, எண்ணங்கள் நிறைவேறும். இல்லத்தில் அமைதி கிட்டும். பொன்னை வாங்கவேண்டும், பொருளை வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். சின்ன விஷயத்தைப் பெரிதாக்கி செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடித்து உங்களை விட்டு விலகிய சொந்தங்கள் எல்லாம், 'எங்கள் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை நீங்கள் தான் முன்நின்று நடத்தித்தரவேண்டும்' என்று மன்றாடிக் கேட்கப் போகிறார்கள்.
பகை நட்பாகி பாசம் கூடும் இந்த வருடத்தில் குருவின் பரிபூரண பார்வையும் 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே பாயில் படுத்தவர்கள், நோயில் சிக்கியவர்கள் இனி உற்சாகத்தோடு பணிபுரிந்து உடனுக்குடன் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளப் போகிறீர்கள். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பயணங்களால் பலன் கிடைக்கும்.
நான்கில் சஞ்சரிக்கும் குருவால் தாயின் உடல்நலம் சீராகும். தகுந்த மருத்துவம் கைகொடுக்கும். சேய் பிறக்கவில்லையே என்ற கவலை அகலும். பணியாளர்களால் ஏற்பட்ட சோர்வு நிலை மாறும். 6-ல் சஞ்சரிக்கும் ராகுவால் வழக்குகளில் திருப்பம் ஏற்படும். கடன் சுமையை தீர்க்க நண்பர்கள் உதவி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
குருபார்வையால் கோடி நன்மை கிட்டும்!
நவக்கிரகங்களில் நல்ல கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு ஒன்றுதான். அந்த குரு பகவான் பார்த்தால் கோடி தோஷங்கள் இருந்தாலும் நீங்கி விடும். அப்படிப்பட்ட ஒரு அரிய வாய்ப்பு உங்களுக்கு 5.7.2015 முதல் வருகின்றது. அதாவது ஆனி மாதம் 20-ம் தேதி முதல் அதன் பார்வை உங்கள் ராசியில் ஓராண்டிற்குப் பதியப் போகின்றது.
எனவே, துயரங்கள் விலகிச் செல்லும். பாங்கான வாழ்க்கை மலரும். கெட்டவர்களின் சகவாசம் விலகும். கேட்டமாத்திரத்தில் உதவி கிட்டும். பட்டி தொட்டியெல்லாம் உங்கள் புகழ் பரவும். பத்திரப்பதிவுகளில் இருந்த தடை அகலும்.
அற்புத வாழ்வு தரும் ஐந்தாமிடத்து குரு!
ஆனி 20-ம் தேதி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தங்கு தடைகள் அகலும். மங்கல ஓசை மனையில் கேட்கும். மற்றவர்கள் உங்களைப் புகழும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். தங்கம், வெள்ளி என்று விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வீட்டிற்கு வாங்கிச் சேர்க்கப் போகிறீர்கள்.
ஜென்மத்தை குருதான் பார்த்தால்
சிக்கல்கள் விலகி ஓடும்!
ஒன்பதை குருதான் பார்த்தால்
ஒளிமயம் வாழ்வில் சேரும்!
பதினொன்றை குருதான் பார்த்தால்
பணப்புழக்கம் அதிகரிக்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
எனவே, ஒன்பதாம் இடத்தைப் பார்க்கும் குருவால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு வந்து சேரப் போகின்றது. அலைக்கழித்த நோய்கள் மாறும். அன்னை, தந்தையரால் நன்மை கிட்டும். பூமி விற்பனையால் தன லாபம் கிடைக்கும்.
11-ம் இடத்தை குரு பார்ப்பதால் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் இருமடங்காகும். தொலைந்த பொருட்கள் மீண்டும் வந்து சேரும். இளைய சகோதரத்தால் இனிய பலன் கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் கூடும்.
நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!
மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகின்றார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகின்றார். உங்கள் ராசிக்கு 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் சஞ்சரிக்கும் இந்த நேரம் பிள்ளைகளால் நன்மை கிட்டும். பிரச்சினைகள் ஒவ்வொன்றும் நல்ல முடிவிற்கு வரும்.
விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. குழந்தைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிகள் ஒன்று கூட கைகூடாதவர்கள், இனி மகிழ்ச்சி அடையும் விதத்தில் வேலை வாய்ப்பு கிடைத்து உதிரி வருமானங்களும் உங்களுக்கு வந்து சேரப்போகிறது.
லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது சேமிப்பு உயரும். திடீர் திடீரென ஆன்மிக செலவுகளுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். பூமி யோகம் முதல் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரை சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.
சனியின் சஞ்சார நிலை!
சனி பகவான் வைகாசி 29-ம் தேதி (12.6.2015) முதல் துலாம் ராசிக்குச் சென்று வக்ரமடைகிறார். 30.7.2015 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு பங்குனி 13-ம் தேதி (26.3.2016) விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.
இதற்கிடையில் வருடத்தொடக்கத்திலேயே சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஆவணி 19-ம் தேதி (5.9.2015) விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார்.
இப்படி வக்ரமாவதும், வக்ர நிவர்த்தியாவதும் இந்த ஆண்டு அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. வக்ர காலத்தில் நன்மைகள் உங்களுக்கு உருவாகும் என்றாலும் தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதால் தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. எதிர்பார்க்கும் ஊர்களுக்கு இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.
ஏழில் சனி சஞ்சரிக்கும் பொழுது மட்டும் எச்சரிக்கை தேவை. துலாத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்!
20.12.2015-ல் கன்னி ராசியில் குரு அதிசாரம் பெறும் பொழுதும், 7.2.2016-ல் சிம்ம ராசிக்குள் வக்ரம் பெறும் பொழுதும் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். உதிரி வருமானங்கள் வந்தாலும் ஒரு சில நிமிடங்களில் செலவாகி விடும். நீண்ட தூரப் பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். வீட்டுப் பராமரிப்பு செலவுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!
ராசிநாதன் செவ்வாயை பலப்படுத்த கந்தப்பெருமானை கவசம் பாடி வழிபட்டு வாருங்கள். சனியின் ஆதிக்கம் இருப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
மேலும் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்வதன் மூலம் தித்திக்கும் வாழ்க்கை அமையும்.
மங்கையருக்கான மகத்தான பலன்கள்!
மேஷ ராசியில் பிறந்த பெண்களே, வருடத்தொடக்கத்தில் செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சுறுசுறுப்பும், சோர்வும் மாறி, மாறி வந்துகொண்டே இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆனி 20-க்கு மேல் குருப்பெயர்ச்சியின் விளைவாக மிகுந்த யோக பலன்கள் வந்து சேரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் எளிதில் கைகூடி வரும். கல்வித்தடை அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் சேமிப்பு அதிகரிக்கும். செவ்வாய், வெள்ளியில் அம்பிகையை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.