மாத ராசி பலன்

விருச்சிகம்

மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்) சிம்ம குருவின் பார்வையால்
செல்வ நிலை உயரும்!


சொல்லும் சொற்களை எல்லாம் வெல்லும் சொற்களாக்கும்
விருச்சிக ராசி நேயர்களே!


தனாதிபதி குரு உச்சம் பெற்றும், ராசிநாதன் செவ்வாய் தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியுடனும் இணைந்து செயல்படும் அமைப்பில் இந்த புத்தாண்டு தொடங்குவதால் உங்கள் தொழில்வளம் மேலோங்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் தன்னம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு தக்க துணையாக இருக்கும். தெய்வீக சிந்தனை அதிகம் உண்டு. வெற்றி ஒன்றையே உங்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.

குரு பார்க்க கோடி நன்மை!

பார்வையால் பலன் கொடுக்கும் குரு பகவான், ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். தனபஞ்சமாதிபதி உச்சம் பெற்று உலா வரும் இந்தப் புத்தாண்டில் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். பாராட்டும், புகழும் கூடும்.

பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகி இயல்பாக வளம் கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களை நாள்தோறும் கொண்டு வந்து சேர்ப்பர். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
ஞானகாரகன் கேது பஞ்சம ஸ்தானத்தில் வீற்றிருக்க பஞ்சமாதிபதி உச்சம் பெற்று விளங்குவதால் பத்திரிகைத் துறை, எழுத்துத் துறை, கலைத்துறை, ஜோதிடத்துறை, ஆன்மிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு இந்தப் புத்தாண்டு ஒரு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையும். கடல் வணிகம் செய்பவர்களும் காகிதத் தொழில் புரிபவர்களும் கை நிறையப் பொருள் குவிப்பர்.

ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை சனி சகாய ஸ்தானாதிபதியாக விளங்குவதால் எல்லா விதங்களிலும் உங்கள் சகாயங்கள் வந்து சேரும்.

தொழில் ஸ்தானாதிபதி சூரியனோடு ராசிநாதனும், லாபாதிபதியும் இணைந்து சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. அரசுவழிச் சலுகைகளும் கிடைக்கும்.

குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 5 ஆகிய இடங்களிலும் பதிவது யோகம் தான். குருவின் பலத்தோடும், குரு ஓரையிலும், குரு சந்திர யோகத்தோடும் ராசிநாதன் செவ்வாய்க்குரிய தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானின் வாகனமான மயில் நடைபயிலும் பஞ்ச பட்சி நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது.

குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!

'பொன்னவன்' என்றும், 'மன்னவன்' என்றும் வர்ணிக்கப்படுகின்ற குரு எந்தெந்த இடத்தைப் பார்க்கிறதோ, அந்த இடங்களில் ஆதிபத்யமெல்லாம் வளர்ச்சியடையும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது கடக குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் நலம் சீராகும். உற்சாகம் குடிகொள்ளும். வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

மூன்றாமிடத்தை குரு பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகளில் ஒருவராக நீங்களும் மாறப் போகிறீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். வயல், வீடு என்று வருமானத்தை அசையாத சொத்துக்களாக மாற்றி வைத்துக் கொள்ள பிரியப்படுவீர்கள். புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பெரிய படிப்பு படிக்க வேண்டும். கலெக்டராக வேண்டும், காவல் துறையில் உயரதிகாரியாக விளங்க வேண்டும், மருத்துவராகி நாடுவிட்டு நாடு சென்று புகழ்பெற வேண்டும் என்றெல்லாம் அசைபோட்டுப் பார்த்த உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் விதத்தில் அவை நடைபெறப் போகிறது.

பத்தாமிடத்து குரு முத்தான பலன் தருமா?

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் 10-ம் இடமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். சுமார் ஓராண்டு காலம் அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்த்து ஏராளமான நற்பலன்களை வழங்கப் போகிறார்.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பதவியில் உள்ள இடையூறுகளை அகற்றுவார். எதிரிகள் உதிரிகளாவர். இரண்டாமிடத்தைக் குரு பார்த்தால் திரண்ட செல்வம் வந்து சேரும் என்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்க வைப்பதும், ஒரு தொழில் செய்பவரை மறுதொழில் செய்ய வைப்பதும் பத்தாமிடத்து குருவின் சஞ்சாரம் தான்.

இரண்டினை குருதான் பார்த்தால்
திரண்டதோர் செல்வம் சேரும்!
நான்கினை குருதான் பார்த்தால்
நலம் யாவும் வந்து சேரும்!
ஆறினை குருதான் பார்த்தால்
ஆதாயம் பிறரால் கிட்டும்!


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

குறிப்பாக குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இரண்டாமிடத்தைக் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். மணி விழா, மண விழா, முத்து விழா, பவள விழா போன்ற விழாக்கள் இல்லத்தில் நடைபெறும். நான்காமிடத்தை குரு பார்ப்பதால் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோகத்தில் நீண்ட தூர மாறுதல் ஒரு சிலருக்கு வந்து சேரும்.ஆறாமிடத்தை குரு பார்ப்பதால் வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். எதிரிகள் விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டு தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!


மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். 10-ல் சஞ்சரிக்கும் ராகுவால் தொழில் வளம் மேலோங்கும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களை இணைத்துக் கொள்வீர்கள். வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பும் விருத்திக்கும். வீடு வாங்கும் யோகம் முதல் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவது வரை கேதுவின் ஆதிக்கத்தால் நிகழவிருக்கிறது.

பெற்றோரின் நலத்தில் கவனம் தேவை. எப்பொழுதோ வாங்கிய இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று ஆதாயத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இது போன்ற நேரங்களில் பாம்பு கிரகங்களுக்குரிய யோக ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து பரிகாரங்கள் செய்வதன் மூலம் பல வழிகளிலும் உங்களுக்கு நன்மை வந்து சேரும்.

சனியின் சஞ்சார நிலை!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார். 30.7.2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் மீண்டும் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார். இப்படி ஆண்டு முழுவதும் சனி வக்ரமாவதும், வக்ர நிவர்த்தியாவதும் நடைபெற்றுக் கொண்டேஇருக்கிறது.

பொதுவாக ஏழரைச் சனி நடைபெறும் பொழுது, சனி வக்ரம் பெற்றால் இனிக்கும் பலன்கள் ஏராளமாக நடைபெறும். சனி பலம் பெற்று சஞ்சரித்தால் மனக்கவலை அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படும். குழப்பங்கள் அகல வேண்டுமானால் கோச்சாரம் சரியாக அமையாவிட்டாலும், தெசாபுத்தி பலம் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஆரோக்கியத் தொல்லை அகலவும், எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், ஜென்மச் சனி முடியும் வரை தொடர்ந்து சனிக் கிழமை தோறும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆனைமுகப் பெருமான், சனி பகவான், அனுமன் ஆகிய தெய்வங்களை வரிசைப்படி வழிபட்டால் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி நீங்கும்.

குருவின் வக்ர காலம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறும் பொழுதும், 7.2. 2016-ல் சிம்ம ராசியில் வக்ரம் பெறும் பொழுதும் கூடுதல் விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. அதிசாரம் பெறும் பொழுது லாபம் இருமடங்காக வரலாம். ஆனால் வக்ரம் பெறும்பொழுது கூடுதல் விரயம் ஏற்படும். எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். விவாகம் செய்வது, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தலாம்.

வருடம் முழுவதும் வசந்தம் பெற வழிபாடு!

ராசிநாதன் செவ்வாயை பலப்படுத்த முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதன் மூலம் கீர்த்தியைப் பெறலாம். பிரதோஷ வழிபாடும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். மேலும் தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்திலேயே உச்சம் பெற்ற குரு உங்கள் ராசியை பார்ப்பதால் மிச்சம் வைக்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும். தாய்வழி ஆதரவு உண்டு. குடும்ப ஒற்றுமை பலப்படும். தேடிய வேலையும் கிடைக்கும்.

தெய்வீக நாட்டமும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உங்களின் ஆற்றலைப் புரிந்து கொண்டு குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்வர். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. இட மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் போன்ற மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரலாம்.

கல்யாணப் பேச்சுக்களை காலதாமதப்படுத்தாமல் முடித்துக் கொள்வது நல்லது. ஜென்மச் சனி விலகும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமை சேரும். ராகு-கேது பிரீதி நன்மையை வழங்கும்.

அதிகம் படித்தவை

^