மாத ராசி பலன்

துலாம்

மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)


குடும்பச் சனியின் ஆதிக்கத்தால் கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்!

அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட அழகாகப் பேசி அனைவர்
மனதிலும் இடம்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே!


பதவி மாற்றத்தையும், இடமாற்றத்தையும் கொடுக்கும் பத்தாமிடத்துக் குருவின் வக்ர இயக்கத்தோடும், ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கத்தோடும் புத்தாண்டு பிறக்கின்றது.

ஆண்டின் தொடக்கத்தில் மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் சனி கிரகம் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவானும் வருடத் தொடக்கத்தில் முதல் இரண்டு நாட்கள் வக்ரமாக இருந்து பிறகு வக்ர நிவர்த்தியடைகின்றார்.

ஆண்டின் பிற்பாதியில் அதிசாரம் பெற்றும், வக்ரம் பெற்றும் குருவின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வளர்ச்சியும், தளர்ச்சியும் இணைந்தே உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

வருமானம் ஒரு நாள் அதிகரிக்கும், பற்றாக்குறை மற்றொருநாள் வந்து சேரும். பகை ஒரு நாள் திடீரென உருவாகும், மறுநாளே அவர்கள் உறவாகி உங்கள் மனதில் இடம் பிடிப்பர். ஆரோக்கியப் பாதிப்புகளால் அன்றாட மருத்துவச் செலவுகள் கூடும்.

புத்தாண்டு பிறக்கும் பொழுது குருச்சந்திர யோகம் உருவாகிறது. இதன் விளைவாக தொழில் வளர்ச்சி வருடத் தொடக்கத்தில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் 2-ல் சனி வக்ரம் பெற்றிருக்கிறது. எனவே, குடும்பச் சுமை கூடும். கொடுக் கல்-வாங்கல்களில் சிக்கல்கள் உருவாகி மறையும். திடீர் செலவுகள் உருவாகலாம்.

சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கிறார்கள். அவரோடு விரய ஸ்தானாதிபதி புதன் இருப்பதால் மாமன், மைத்துனர் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகளாலும் சில அல்லல்கள் ஏற்படும்.

குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!

வருடத்தொடக்கத்தில் 10-ல் சஞ்சரிக்கும் குரு, வக்ர இயக்கத்தில் இருப்பது யோகம் தான். சென்ற ஆண்டில் சிக்கலாக இருந்த காரியங்கள் கூட சிரமமின்றி முடிவடையும். மேலும் 3,6-க்கு அதிபதியான குரு வக்ரம் பெற்றிருப்பது நீங்கள் செய்த பாக்கியமாகும். கடகத்தில் உச்சம் பெற்றுள்ள குரு பகவான் தனது பார்வையை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிக்கிறார்.

இதன் விளைவாக குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களில் திருமணமாகாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு திருமணத் தடை அகலும்.

சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு நீண்ட தூரப் பயணங்கள் வந்து சேரும். தாய் வழி ஆதரவு பெருகும். ஆறாமிடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் உதிரிகளாவர். இலாகா மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குருவை வழிபட்டால் குதூகலம் அதிகரிக்கும்.

பண வரவைக் கூட்டுமா பதினோராமிடத்து குரு!


இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் பதினோராமிடமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு அதன் அருட்பார்வையை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிக்கப் போகிறார். குரு பார்க்கும் அந்த இடங்கள் எல்லாம் புனிதம¬டயும். அதற்குரிய ஆதிபத்யங்கள் துரிதமாக நடைபெறும்.

மூன்றினை குருதான் பார்த்தால்
முன்னேற்றம் அதிகரிக்கும்!
ஐந்தினை குருதான் பார்த்தால்
அகிலத்தில் வெற்றி கிட்டும்!
ஏழினை குருதான் பார்த்தால்
இல்லறம் சிறப்பாய் வாய்க்கும்!


அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மூன்றாமிடத்தை பார்க்கும் குருவால் முக்கிய வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் அகலும். தக்க விதத்தில் சகோதரர்கள் ஒத்துழைப்பு செய்வர். தலைமைப் பொறுப்புகள் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

5-ம் இடத்தை பார்க்கும் குருவால் திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றில் இருந்த தடைகள் அகலும். செல்லக் குழந்தைகளுக்கு சிறப்பான கல்யாணத்தை நடத்திப் பார்க்கும் நிலை உருவாகும்.

குழந்தைகள் கடல் தாண்டி சென்று படிக்க விருப்பப்பட்டால் அதற்காகச் செய்யும் ஏற்பாடுகள் வெற்றிதரும். தேவைப்படும் தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும். பிரிவினையாகாத சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகல முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

வாங்கல்-கொடுக்கலில் இதுவரை இருந்த ஏமாற்றங்கள் அகலும். வலிமையான குரு சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும் பொழுது தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர்கள் விலகி புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து உங்கள் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொடுப்பர். அயல்நாட்டுப் பயணம் கூட கைகூடலாம்.

அதே நேரத்தில் உத்தியோகத்தில் உள்ளவர்கள் கம்பெனி சார்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர் களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி அன்று 8.1.2016 அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிப்பார். இதன் விளைவாக உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது யோகம் தான். கேதுவும் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இக்காலத்தில் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
அதிகார வர்க்கத்தினரின் அல்லலுக்கு ஆளானவர்கள் இப்பொழுது மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

ஊதிய உயர்வு, வரவேண்டிய தொகை போன்றவைகள் வந்து சந்தோஷத்தில் ஆழ்த்தும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்குவதோடு அதில் ஒரு பகுதியை தொழிலுக்கும் முதலீடு செய்வீர்கள்.
இதுபோன்ற நேரத்தில் 11-ம் இடத்து ராகுவாலும் பாக்கியஸ்தான கேதுவாலும் சகல பாக்கியங்களும் வந்து சேர ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலம் அறிந்து சர்ப்ப சாந்திகளைச் செய்து கொள்வது நல்லது.

சனியின் சஞ்சார நிலை!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார். 30.7. 2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார்.

பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3.2016-ல் விருச்சிக ராசியில் மீண்டும் சனி வக்ரமடைகிறார்.
உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சனி நட்பு கிரகமானவர். அதிலும் சுக ஸ்தானத்திற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால் அவர் பலம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் எல்லா யோகங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். அவர் பலமிழந்திருக்கும் நேரத்தில் பாதகங்கள் ஏற்படாமல் இருக்கப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. ஒருவரை சாதனையாளர் ஆக்குவதும் சனி தான். சோதனைகளுக்கு ஆட்படுத்துவதும் சனி தான்.

உங்களுக்கு நடைபெறும் சனி முதல் சுற்றா?, இரண்டாவது சுற்றா?, மூன்றாவது சுற்றா?, நான்காவது சுற்றா? என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். 'மங்கு சனி' என்றால் மனக்கவலை ஏற்படும். 'பொங்கு சனி' என்றால் பொருளாதார நிலை உயரும். 'தங்கு சனி' என்றால் தடைகள் விலகும். சுற்றுகளில் உலா வரும் சனியைத் தொடர்ந்து நீங்கள் வழிபட்டு வந்தால் வெற்றிச்செய்திகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.

குரு வக்ர காலம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறும் பொழுதும், 7.2. 2016-ல் சிம்ம ராசிக்குள் வக்ரம் பெறும் பொழுதும் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு வாங்கும் அல்லது கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். பயணங்களால் பலன் கிட்டும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

வருடம் முழுவதும் வசந்தம் பெற வழிபாடு!


உங்கள் ராசிநாதன் சுக்ரனைப் பலப்படுத்த வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து சாந்த ரூப அம்பிகையை வழிபாடு செய்யுங்கள்.

சனிக்கிழமை அன்று ஆதியந்தப் பிரபுவையும்,
ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள். மேலும் தெசாபுத்திக் கேற்ற தெய்வவழிபாடுகளைச் செய்வதன் மூலம் தேக்க நிலை மாறி ஆக்கநிலை உருவாகும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

துலாம் ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தாய்வழி ஆதரவு பெருகும். சகோதரர்கள் வேண்டிய உதவிகளைச் செய்துகொடுப்பர். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் கணவன்-மனைவிக்குள் கனிவு கூடும். கடல் தாண்டி செல்லும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. சென்ற ஆண்டு வரை உபயோகித்த பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கி அணிந்து கொள்ளப் பிரியப்படுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். ஏழரைச் சனியால் ஏற்பட்ட இழப்புகளை சனி விலகும் நேரத்தில் ஈடுசெய்யப் போகிறது. விற்ற சொத்துக்களை மீண்டும் வாங்கி மகிழ்வீர்கள்.

மார்கழிக்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும். தையில் புது மனை புகுவிழாக்கள் கூட நடத்திப் பார்ப்பர். சனி மற்றும் ராகு-கேது வழிபாடு நன்மையை வழங்கும்.

அதிகம் படித்தவை

^