மாத ராசி பலன்

கன்னி

மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)


மார்கழிக்கு மேல் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்!

கடின உழைப்பும், கடமை உணர்வும் கொண்டு கலகலப்பாகப் பேசும் கன்னி ராசி நேயர்களே!

'பெருமையாக இருக்க வேண்டுமென்று சொல்பவர்களுக்கு மத்தியில், பொறுமையாக இருக்க வேண்டுமென்று சொல்பவர்கள் நீங்கள்'. அருமையாக உபசரித்து அத்தனை பேரையும் அசத்தி விடுவீர்கள். உற்றார், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தோர் மீது பாசம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். கற்றுத்தேர்ந்தவர்களைக் காட்டிலும் உங்களுக்கு யோசனை அதிகமாகவே வரும். அதை உங்களிடம் கேட்டு கடைப்பிடித்தவர்கள் பெருமை அடைவர்.

சுக்ர பலம் நன்றாக இருக்கும் நேரம்!

வருடத் தொடக்கத்தில் இரண்டு கிரகங்கள் வக்ரம் பெற்றிருக்கின்றன. ஒன்று சனி, மற்றொன்று குரு. இதில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பது நன்மை தான். 4, 7-க்கு அதிபதியான கிரகம் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது அக்காலம் பொற்காலமாக மாறும். அதே நேரத்தில் அதன் பார்வை பதியும் இடங்கள் புனிதமடையும். எனவே, உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

வழக்குகளில் வெற்றி கிட்டும். வாரிசுகளின் நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். குறிப்பாக பெண் குழந்தைகளின் சீர்வரிசைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக் களில் பாகப்பிரிவினை ஏற்படவில்லையே என்ற கவலை இனி அகலும்.

உத்தியோகம் நீங்கலாக பிற தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். குறிப்பாக லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் தொழிலில் லாபம் இருமடங்காக உயரும். வெளிநாட்டு யோகம் ஒரு சிலருக்கு வந்து சேரும். கல்வி பயில்பவர்களுக்கு படிப்பை முடித்து பட்டதாரி ஆவதற்கு முன்னதாகவே வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

ஏழரைச் சனி விலகியது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும், துலாம் ராசியில் மீண்டும் ஒரு சில நாட்கள் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது ஏழரைச் சனியின் ஆதிக்கம் தான் நடைபெறும். குடும்பச் சனி என்பதால் குடும்பத்தில் சுபச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.

5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி 3-ம் இடத்தில் வக்ரம் பெறுகிறார். எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கணிசமான தொகை கைகளில் புரளும். விரோதிகளை வென்று வெற்றிக் கொடி பிடிப்பீர்கள். வேகமாகப் பணியாற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

அஷ்டமத்தில் 3 கிரகங்கள் கூடியிருக்கின்றன. அவற்றில் ஒன்று ராசிநாதன், மற்றொன்று விரயாதிபதி, மற்றொன்று அஷ்டமாதிபதி. 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதி வருடத் தொடக்கத்தில் ஒன்று கூடுவதால் விபரீத ராஜயோகம் உருவாகலாம். எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தேக நலனில் திடீர் திருப்பம் ஏற்படும்.

சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் மாறும் வரை சற்று பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. கன்னி ராகு எண்ணியதை நிறைவேற்றும் என்றாலும் ஏற்ற இறக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும்.

குழப்பங்களைத் தீர்க்கும் குருவின் பார்வை!

எத்தனை கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை தான் குழப்பங்களை அகற்றும் என்பார்கள். ஆனி 20-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 2, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கும் குரு பகவான் ஆனி 20-ம் தேதிக்கு மேல் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களை அல்லவா பார்க்கிறார். வருடம் ஒரு ராசி வீதம் அமரும் குருவால் திருமண யோகம் முதல் செல்வ வளம் பெறும் யோகம் வரை நமக்குக் கிடைக்கும்.

விரைவில் வருகிறது, விரய குரு!

இதுவரை உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், ஆனி மாதம் 20-ம் தேதி முதல் விரய ஸ்தானமான சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, இனி லாபம் வராமல் விரயமாக வருமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வீடு, வாசல், கல்யாணம், குழந்தைகள் நலன், வெளிநாட்டுப் பயணம், வாகன யோகம், ஆபரணங்கள் வாங்குவது போன்றவற்றிற்காக செலவிட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பூரணமாக பதிவதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன.

நாலினை குருதான் பார்த்தால்
நல்லதோர் சொத்து வாய்க்கும்!
ஆறினை குருதான் பார்த்தால்
அன்னியர் நேசம் கிட்டும்!


எட்டினை குருதான் பார்த்தால்

இழப்பினை ஈடு செய்யும்! என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
எனவே, நான்காமிடத்தை பார்க்கும் குருவால் நன்மைகள் ஏராளமாக வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். தம்பி, தங்கைகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்குரிய பங்கு கிடைக்கவில்லையே என்ற கவலை அகலும்.
ஆறாமிடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் உதிரிகளாவர்.

எல்லைமீறிப் பழகியவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் ஏங்கிய நிலை மாறி, லாபம் கைகளில் புரளும். இந்த நேரத்தில் கடன்கள் செலுத்தி மகிழ்வீர்கள்.

சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வரன்கள் வாயில்தேடி வரும். வாழ்க்கைத் துணை வழியே வரவு கிட்டும். பெற்றோர்களின் மணி விழாக் களையும் நடத்திப் பார்ப்பீர்கள். கடல் தாண்டி வரும் செய்தி காதினிக்கச் செய்யும். தீர்த்த யாத்திரைகளும், தெய்வ தரிசனங்களும் வந்து சேரும். விட்டுப் போன சொந்தங்கள் எல்லாம் விரும்பி வந்து சேரலாம்.

நலம் தரும் ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் நாள் 8.1.2016 அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசியிலேயே இதுவரை சஞ்சரித்து வந்த ராகு இப்பொழுது பின்னோக்கி செல்வது யோகம் தான்.
இட மாற்றம், ஊர் மாற்றங்களால் இனிமை ஏற்படும்.

மற்றவர்களுக்கு ஜாமீன் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை இப்பொழுது வந்து சேரும். 6-ல் சஞ்சரிக்கும் கேதுவின் ஆதிக்கத்தால் உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லைகள் அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். சர்ப்ப பிரீதிகளை செய்து கொள்வதன் மூலம் சந்தோஷத்தை அதிகம் வரவழைத்துக் கொள்ளலாம்.

சனியின் சஞ்சார நிலைகள்!

சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார். 30.7.2015 வக்ர நிவர்த்தியாகிறார்.

பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3.2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.
இங்ஙனம் சனியின் சஞ்சார நிலை வருடம் முழுவதும் வக்ரத்தில் இருக்கிறது. பின்னோக்கி துலாம் ராசிக்கும் வருகிறது. வக்ர நிவர்த்தியாகி மீண்டும் முன்னோக்கிச் செல்கிறது.

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம் தான். கொடுத்த கடன்கள் வசூலாகும். கோபத்தால் விலகியவர்கள் வந்திணைவர். படுத்த படுக்கையில் இருப்பவர்கள் கூட பணிபுரிய உற்சாகமாக எழுந்து நடப்பர். ஆனால் அதே நேரத்தில் புத்திர ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் பிள்ளைகளின் வழியில் செலவுகள் ஏற்படலாம். அவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிடாமல் மேற்பார்வை செய்து கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும்.

இக்காலத்தில் மந்தன் சனியை மகத்தான ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது நல்லது.

குருவின் வக்ர இயக்கம்!

குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறுகிறார். 7.2.2016-ல் சிம்ம ராசிக்குள் வக்ரம் பெறுகிறார். இதுபோன்ற காலங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். குடும்ப உறவில் இருந்த விரிசல்கள் அகலும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வருடத் தொடக்கத்தில் ராகு- கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் சர்ப்ப கிரக வழிபாடுகளை முறையாகச் செய்வது நல்லது. பட்டாபிஷேக ராமரை வழிபட்டு வந்தால் பலன் அதிகம் கிடைக்கும். மேலும் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

கன்னி ராசியில் பிறந்த பெண்களே, ஆண்டின் தொடக்கத்தில் வக்ர குருவின் ஆதிக்கத்தால் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். அடுத்த வீட்டாருடன் இருந்த பகை மாறும். குரு சந்திர யோகம் செயல்படுவதால் குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ராகு-கேதுக்களின் பெயர்ச்சிக்குப் பின்னால் மிகுந்த நற்பலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயம் முதல் வியாபாரம் வரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றி காண இயலும். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

சனியின் வக்ர காலத்தில் அடிக்கடி விரயங்கள் ஏற்படலாம். கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும். சனி வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

அதிகம் படித்தவை

^