மாத ராசி பலன்
கடகம்
மன்மத வருட ராசிபலன்கள் - 14.04.2015 முதல் 13.04.2016 வரை :
புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்:
ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)
ஜென்ம குரு மாறியதும் செயல்பாட்டில் வெற்றி கிட்டும்!
காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுபவர்கள் யார்யார் என்பதை தெரிந்து வைத்திருக்கும் கடக ராசி நேயர்களே!
உங்களுக்கு இந்த ஆண்டு, உச்ச குருவின் ஆதிக்கத்தோடும், குரு சந்திர யோகத்தோடும் பிறக்கிறது. பிறந்த இரண்டு நாட்களிலேயே குருவின் வக்ர இயக்கம் மாறி மிகுந்த பலம் பெறுகிறார். 9-க்கு அதிபதியான குரு உச்சம் பெற்று உங்கள் ராசிநாதனான சந்திரனை பார்க்கும் விதத்தில் வருடம் தொடங்குவதால் வளர்ச்சியின் உச்சத்துக்கு செல்லப் போகிறீர்கள்.
தளர்ச்சி அகன்று, தட்டுப்பாடுகள் விலகப் போகிறது. சப்தம அஷ்டமாதிபதியான சனி பகவானோ வக்ரம் பெற்று கன்னி ராகுவால் பார்க்கப் படுகிறார். எனவே, பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்து புகழேணியின் உச்சிக்கு கொண்டு செல்லப் போகின்றது.
நட்புவட்டத்தைப் பெருக்கிக் கொள்ளப் பிரியப்படுபவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் நீங்கள். சூழும் பகையால் அஞ்சமாட்டீர்கள். உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதை முடித்துக் கொடுக் காமல் வீடு திரும்பமாட்டீர்கள். சொந்த வேலையை விட்டு விட்டு வந்த வேலையைக் கவனிப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்.
குருச்சந்திர யோகத்தால் கூடுதல் நற்பலன்!
ஆண்டின் தொடக்க நாளில் உலாவரும் கிரகங்களின் ஆதிக்கம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வேண்டிய நற்பலன்கள் கிடைக்கவும், வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையவும் நவக்கிரகங்களின் சஞ்சார நிலை நமக்கு ஒத்துழைக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது யோகம் செய்யும் செவ்வாய் தனாதிபதி சூரியனுடன், சகாய ஸ்தானாதிபதி புதனுடனும் இணைந்து தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இந்தப் புத்தாண்டில் தொழில் வளம் மேலோங்கப் போகிறது.
உறவுகளுக்குள் இருந்த விரிசல்கள் விலகும். இரவு பகலாகப் பாடுபட்டதற்கேற்ற பலன்கள் இப்பொழுது வந்து சேரப் போகின்றது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழப் போகிறீர்கள். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். சகோதரர்களால் சகாயம் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். களத்திர ஸ்தானத்திற்கும், ஆயுள் ஸ்தானத்திற்கும் உள்ள பொறுப்பு சனிக்குரியது. அவர் வருடத் தொடக்கத்தில் மட்டும் வக்ரமல்ல. வருடம் முழுவதும் வக்ரத்திலும், வக்ர நிவர்த்தியிலும் பெரும்பான்மை நேரத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.
அதே நேரத்தில் சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால் குடும்ப பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்து செய்யும் நிகழ்ச்சிகளில் குழப்பங்கள் ஏற்படாது.
ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தவரை மூன்று, ஒன்பது ஆகிய இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். மூன்றாமிடத்து ராகு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்றாலும், 9-ம் இடத்து கேது உன்னத வாழ்க்கையை வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் கொடுக்க இயலாது. மற்ற சகோதரர்களிடம் பெற்றோர்கள் பாசம் காட்டுகிறார்களே என்று மனம் வாடலாம்.
குரு பார்வை கொடுக்கும் யோகங்கள்!
வருடத்தொடக்கத்தில்உங்கள் ராசியில் சஞ்சரித்தபடியே 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பார்க்கிறார். எனவே பஞ்சம ஸ்தானம், சப்தம ஸ்தானம், ஒன்பதாமிடம் ஆகியவை புனிதமடைகின்றன. 5-ம் பார்வையால் சப்தமாதிபதியை குரு பார்ப்பதால் மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். குடும்பத்தில் காலை நேரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், மாலை நேரத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும். வாழ்வை வளப்படுத்துவது குரு வழிபாடுதான்.
அப்படிப்பட்ட குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியாகிறார். உத்தியோகத்தை, வழங்குவதற்கும் அவர் அருள் தேவை. ஊர் மாற்றம், இடமாற்றங்களை வரவழைத்துக் கொள்வதற்கும் அவரது பலம் தேவை.
எனவே, குருபகவானுக்கு முல்லைப் பூ மாலை அணிவித்து, மஞ்சள் வஸ்திரத்தோடு, குருவை வழிபட்டால் வஞ்சகர்கள் விலகுவர். வசதிகள் பெருகும்.
இரண்டாமிடத்துகுரு இனிமை தருமா?
இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரித்து வந்த குரு பகவான் ஆனி மாதம் 20-ம் தேதி முதல் தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு அதன் அருட்பார்வையை 6, 8, 10 ஆகிய மூன்று இடங்களிலும் செலுத்துகிறார். எனவே, வாழ்வில் எண்ணற்ற மாற்றங் கள் வரப்போகின்றது. வருமானப் பற்றாக்குறையும் அகலப்போகின்றது.
ஆறினைக் குருதான் பார்த்தால்
ஆதரவு கரங்கள் கூடும்!
எட்டினை குருதான் பார்த்தால்
இழப்புகள் ஈடு செய்யும்!
பத்தினை குருதான் பார்த்தால்
பதவியும், தொழிலும் வாய்க்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
எனவே, ஆறாமிடத்தைப் பார்க்கும் குருவால் பகை நட்பாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானங்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைத்து வருமானம் மூன்று மடங்காக உயரும்.
அஷ்டம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பத்தாமிடத்தைக் குரு பார்ப்பதால் தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுப்பர்.
நலம் தருமா ராகு-கேது பெயர்ச்சி!
மார்கழி மாதம் 23-ம் தேதி 8.1.2016 அன்று சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கும்ப ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு முயற்சித்த காரியங்களில் தாமதங்களை உருவாக்கியிருக்கலாம். இப்பொழுது இரண்டாமிடத்தில் சஞ்சரித்து இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெற வழிவகுக்கப் போகின்றது. இடம் வாங்கி மனை கட்ட வேண்டும் அல்லது கட்டிய மனையாக வாங்க வேண்டுமென்று திட்டமிட்டவர்களின் கனவு நனவாகும்.
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை வழங்கும். ஆனால் அதே நேரத்தில் 8-ம் இடத்தில் அல்லவா கேது சஞ்சரிக்கின்றார். எனவே, திட்டமிட்டுச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல் திட்டமிடாமலும் செலவு வந்து கொண்டே இருக்கும்.
சனியின் சஞ்சார நிலை!
சனி பகவான் வருடத் தொடக்கத்திலேயே வக்ர இயக்கத்தில் தான் இருக்கிறார். 12.6.2015 முதல் துலாம் ராசியில் வக்ரமடைகிறார். 20.7. 2015-ல் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு 5.9.2015-ல் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தியடைகிறார். பிறகு 26.3. 2016-ல் மீண்டும் விருச்சிக ராசியில் சனி வக்ரமடைகிறார்.
இக்காலத்தில் உங்களுக்கு நன்மையும், தீமையும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
தேவையில்லாத வீண் செலவுகள் அதிகரிக்கும். விரயங்களைச் சமாளிக்க முடியாமல் சில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு நன்மைசெய்யப் போய் அது தீமையில் முடியலாம். நாடு மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்பட நேரிடும்.
எந்த மாற்றம் வந்தாலும் ஏமாற்றத்தைச் சந்திக்க மாட்டீர்கள். வந்த மாற்றத்தை நல்ல மாற்றமாக மாற்றிக் கொள்ள வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.
குருவின் வக்ர காலம்!
குரு 20.12.2015-ல் கன்னி ராசியில் அதிசாரம் பெறும் பொழுதும், 7.2.2016-ல் சிம்ம ராசிக்குள் வக்ரம் பெறும் பொழுதும் ஓரளவு நற்பலன்களை வழங்கும். என்றாலும் 9-ம் இடத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். மேலதிகாரிகளின் பகை வளர்வதை முன்னிட்டு நீண்டதூரப் பயணங்களை ஒரு சிலர் மேற்கொள்வர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும். இதுபோன்ற காலங்களில் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!
ராசிநாதன் சந்திரனைப் பலப்படுத்த திங்கள் தோறும் அம்பிகையை வழிபாடு செய்யுங்கள். வியாழன் தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் செய்தால் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். சனி வக்ர காலத்தில் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது ஆனந்தம் தரும்.
மங்கையருக்கான மகத்தான பலன்கள்!
கடக ராசியில் பிறந்த பெண்களே, காரிய வெற்றி ஏற்படும். கடன் சுமை குறையும். நிழல் போல தொடர்ந்த துயரங்கள் விலகி, நிலையான அமைதி கிடைக்கும். குரு பார்வையால் கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பண வரவு திருப்திகரமாக இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களைத் தாராளமாக வாங்கி மகிழ்வீர்கள். ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். எனவே மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பொதுநலம், மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும்.
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பவுர்ணமி வழிபாடு பலன் தரும்.