ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

மேஷம்

ஆர்வமுடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் குரு 4-ம் இடத்தில் இருக்கிறார். இதனால் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச. 20ல் அவர் கன்னி ராசிக்கு அதிசாரமாக (முன்னோக்கி) இடம் மாறுகிறார். அப்போது உடல் நலம், மனநலத்தில் கவனம் வேண்டும். ராகு தற்போது 6-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இதனால், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வலிமை ஏற்படும். ஆற்றல் மேம்படும். கேது மீனத்தில் இருப்பது அவ்வளவு உகந்த இடமல்ல. 2016 ஜன. 8ல் ராகு 5-ம் இடத்துக்கும், கேது 11ம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். அப்போது ராகுவால் கிடைத்து வந்த பலன்களில் மாற்றம் ஏற்படும். மனக்குழப்பம் நேரலாம். ஆனால், கேது 11க்கு செல்வதால், செயல்களில் வெற்றியைத் தந்து, மனக்குழப்பத்திற்கு மருந்து போட்டு விடுவார்.

சனி 8ல் இருக்கிறார். இது அஷ்டமத்து சனி காலம். உறவினர் வகையில் கவனம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அதேநேரம், சனி பகவான் செப். 5 வரை வக்கிரத்தில் இருக்கிறார். பொதுவாக அஷ்டமத்தில் இருக்கும் சனியால் பிரச்னை என்றாலும், அவர் வக்கிரத்தில் சிக்குவதால் பிரச்னையை தீவிரமாக்க முடியாது. அந்த வகையில் அவரால் நன்மையே என எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, அஷ்டமத்து சனி தந்த வலியால் ஆ என்றவர்கள் ஆறுமாதம் ஆகா என்பீர்கள். இந்த கால கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவும் வரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போய் விட்டால் சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். ஜூலை5க்கு பிறகு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் கடும் முயற்சியின் பேரில் வீடு கட்டுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு குறையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றம் பெறலாம். புதிய பதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபத்துக்கு குறைவிருக்காது. சிலர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தீவிர முயற்சி எடுத்தால் தான் முன்னேற்றம் காண்பர். அடுத்த கல்வி ஆண்டில். சிறப்பான பலன் கிடைக்கும். கலைஞர்கள் அரசிடம் இருந்து பாராட்டு, விருது பெற்று மகிழ்வர். சமூக நல சேவகர்கள் சிறப்படைவர். விவசாயிகள் கால்நடை மூலம் சீரான வருமானம் பெறுவர். பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவரின் அரவணைப்பை பெற்று மகிழ்வீர்கள். 2016 ஜனவரி முதல் கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். ராகுவால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

பணியாளர்களின் வருமானத்திற்கு குறை இருக்காது. புகழோடு பெருமையும் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். கடையை விரிவுப்படுத்தலாம். எதிரிகளால் இடையூறு அவ்வப்போது வரும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வளர்முகமாக இருப்பர்.

மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் திருப்திகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன் பொருள் வந்து சேரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். 2015 ஜூலை5 வரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

அதிகம் படித்தவை

^